மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையத்துக்கு சென்ற 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலின் நேற்றைய தினம் 21 மாநிலங்கள் உட்பட 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. இதில் தமிழத்தில் உள்ள 39 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவின் போது சேலம் செந்தாரப்பட்டி ஊராட்சி தோடக்கப்பள்ளியில் வாக்களிக்க சென்ற 77 வயது மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதே போல் சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்சுப்பதிவு மையத்தில் வாக்களிக்க சென்ற சூரமங்கலத்தை சேர்ந்த முதியவர் பழனிசாமியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருத்தணி அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் வாக்குப்பதிவு மையத்தில் வாக்குச் செலுத்த வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை உயர்நிலைப் பள்ளியில் சாந்தி என்பவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கினை செலுத்திவிட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.