ஈரோடு மாவட்டம் கோபி அருகே சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் தனசேகர் (36). இவருக்கும் பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வந்தனா (10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் உள்ளனர். தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங் கோயிலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
தனசேகர் சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவருக்கு கடன் பிரச்சனையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை இருந்தே கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில், குழந்தைகளை கொலை செய்துவிட்டு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, நேற்று மதியம் தென்னை மரத்தில் வண்டுகளை கட்டுப்படுத்தும் சல்பாஷ் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகள் வந்தனா மற்றும் மகன் மோனீசுக்கு கொடுத்துள்ளனர். இருவரும் சிறிது குடித்த போதே கசப்பு காரணமாக கீழே துப்பி விட்டு கதறி அழுதனர். அதற்குள் தனசேகரும், பாலாமணியும் சல்பாஸ் மாத்திரைகளை தின்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : அலங்காநல்லூரில் ஆட்டம் காட்டிய விஜயபாஸ்கர், சூரியின் காளைகள்..!! தங்க மோதிரம் வென்று அசத்தல்..!!