கோவை மாவட்டத்தில் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோனிகா. இவர் தனது மகள் மற்றும் தங்கை, மருமகள் ஆகியோருடன் உறவினர் வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்விற்காக சென்றுள்ளார். அப்போது அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு சிறுமுகை அடுத்து உள்ள வச்சினம் பாளையம் அருகே உள்ள பம்புகோஸ் பகுதியில் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். பெண்கள் எல்லோரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். பாலகிருஷ்ணன் தனது காரில் அமர்ந்திருக்கிறார். திடீரென அலறல் சத்தம் கேட்டு காரில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்கள் நீரில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்ட பாலகிருஷ்ணன் ஆற்றில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆயினும் ஆற்றில் மூழ்கிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் நீரில் தத்தளிப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து பாலகிருஷ்ணன் உடன் இணைந்து ஆற்றில் மூழ்கியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் சகுந்தலா என்ற பெண் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மாலை இருட்டும் வரை தேடிய தீயணைப்பு படையினர் அதிகமாக இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை கைவிட்டனர் . இச்சம்பவம் அறிந்து அங்கு வந்த சிறுமுகை இன்ஸ்பெக்டர்
வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் விபரம் தெரிய வந்திருக்கிறது. ஆற்றில் மூழ்கியிருந்த இரண்டு பெண்கள் பாலகிருஷ்ணனின் சகோதரி பாக்கியம் மற்றும் அவரது ஜமுனா மகள் என காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மற்றொரு பெண் சகுந்தலா பாலகிருஷ்ணனுக்கு உறவினர் ஆவார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மோனிகா பாலகிருஷ்ணனின் மகள் என்றும் மற்றொரு பெண்ணான கஸ்தூரி பாலகிருஷ்ணனின் தங்கை பாக்கியத்தின் இன்னொரு மகள் எனவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்கள் உறவினர் ஒருவரின் கிரகப்பிரவேசத்திற்கு வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. விசேஷத்திற்கு வந்த இடத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.