ஆந்திராவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் தனித்தனியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரயில் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆந்திர மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவித்துள்ளார். அதில் ரயில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்தவருக்கு தலா ரூ.10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர் பலியாகி இருந்தால் தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளதாக அவரது அலுவலக எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.