திருச்சியில் நம்பர் 1 டோல்கேட் அருகே திருநங்கை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் மேல காவக்கார தெருவை சேர்ந்தவர் திருநங்கை மணிகண்டன் என்ற மணிமேகலை(28). கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே இருக்கும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகின்றனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது.