ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்காக தங்களின் சொந்த ஊர்களில் இருந்து இடம் பெயர்ந்து மக்கள் சென்னையில் குடியேறி வருகின்றனர். இதனால், மக்கள் நெருக்கம் கொண்ட நகரமாக சென்னை திகழ்கிறது. தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் பேருந்துகள், ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சிலரின் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு பேருந்து மற்றும் ரயில்கள் ஆகிய இரு போக்குவரத்தையும் பயன்படுத்தினால் தான் விரைவாக அலுவலகம் சென்றடைய முடியும். அனைத்து போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேருந்து, ரயில் உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்கும் சூழல் உள்ளது.
இதனால் மாநகர போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்வதற்கான கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரப் பொதுப்போக்குவரத்தை இணைத்து ஒரே பயணசீட்டு திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தயக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.