அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு மார்ச் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பாடவாரியான காலிப்பணியிடங்கள், அவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, ஆன்லைன் விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு OMR அடிப்படையில் மே 11, 2025 அன்று நடத்தப்படும். தேர்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.57,700 தொடங்கி, அதிகபட்சம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 100 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 300, மற்ற அனைத்துத் தேர்வர்களுக்கும் ரூ.600 பொருந்தும்.
எப்படி விண்ணப்பிப்பது…?
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.gov.in ஐ செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில், ‘Apply Online’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பதிவு மற்றும் உள்நுழைவுடன் தொடர வேண்டும். பின்னர் படிவத்தை நிரப்பவும், ஆவணங்களைப் பதிவேற்றவும் மற்றும் கட்டணம் செலுத்தலாம். படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது .