வாகனங்களுக்கான வரி உயர்வு கண்டித்து லாரி உரிமையாளர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு (திருத்தம்) சட்டம், 2023, பழைய மற்றும் புதிய இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மீதான ஆயுள் வரி விகிதத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நவம்பர் 9, 2023 அன்று சட்டம் அமலுக்கு வரும் என அறிவித்தார். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்பு சட்டம், 1974ஐ திருத்துவதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த மாதம் ஏற்றுக்கொண்டது. இந்த வார தொடக்கத்தில் ரவி அதற்கு தனது ஒப்புதலை அளித்தார்.
சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்குப் பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ’கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி பொருந்தும்.
வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு சிறிய ரக லாரி உரிமையாளர்களும், லாரி சார்ந்த தொழில் செய்வோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 25 லட்சம் வாகனங்கள் இன்று ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.