சீனாவுக்கு பதிலடி தர 245% அளவுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனப் பொருட்களுக்கு 145% வரிகளை விதிக்க அமெரிக்கா முன்னர் எடுத்த முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, போயிங் ஜெட் விமானங்களை இனி டெலிவரி செய்ய வேண்டாம் என்று சீனா தனது விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து விமானம் தொடர்பான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வாங்குவதை நிறுத்துமாறு சீன விமான நிறுவனங்களுக்கு பெய்ஜிங் அறிவுறுத்தியது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை நடத்துவதற்கு “பயப்படவில்லை” என்று சீனா எச்சரித்ததுடன், பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தியது. அமெரிக்கா உண்மையிலேயே பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினால், அது தீவிர அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலை நிறுத்த வேண்டும். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை அடிப்படையில் சீனாவுடன் பேச வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.
அமெரிக்கா மற்ற நாடுகள் மீது வரிகளை உயர்த்தியதில் இருந்து உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது வரிகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 245% அளவுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தனது நாட்டின் பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி, அதிகமாக சீனாவுக்கு 145% அளவுக்கு இறக்குமதி வரி விதித்திருந்தார். சீனாவும் பதிலடியாக வரி விதித்தது. இதனால், தற்போது ஆத்திரமடைந்த அமெரிக்கா, சீனாவுக்கான வரியை 245% உயர்த்தியுள்ளது.