துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 9 வயது சிறுவன், தான் சேகரித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நன்கொடையாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. இந்நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டிவருகின்றன. அந்தவகையில், துருக்கியைச் சேர்ந்த அல்பார்ஸ்லான் எஃபே டெமிர் (Alparslan Efe Demir) எனும் 9 வயது சிறுவன், துருக்கியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளுக்கு பங்களித்துள்ளார். தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முழுவதுமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடமேற்கு தாஸ் மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறுவன் டெமிர் மீட்கப்பட்டு துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை பிரசிடென்சி (AFAD) மூலம் அமைக்கப்பட்ட கூடாரத்தில் பராமரிக்கப்பட்டு வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய சிறுவன், “டுஜ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் மிகவும் பயந்தேன். நமது நகரங்கள் பலவற்றில் நிலநடுக்கம் பற்றி கேள்விப்பட்டபோது எனக்கும் அதே பயம் இருந்தது. பெரியவர்கள் கொடுத்த பாக்கெட் மணியை அங்குள்ள குழந்தைகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன்,” என்ரூ கூறி நெகிழவைத்துள்ளான்.
நான் சாக்லேட் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. அங்குள்ள குழந்தைகள் குளிர் மற்றும் பசியுடன் இருக்கக்கூடாது. அங்குள்ள குழந்தைகளுக்கு எனது உடைகள் மற்றும் பொம்மைகளை அனுப்பி வைப்பேன் என்றும் அந்த சிறுவன் கூறினான்.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய முன்வந்த அவனது பண்பிற்காகவும், எண்ணத்திற்காகவும் அல்பார்ஸ்லான் எஃபே டெமிரருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.