தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக #GetOut என வைக்கப்பட்ட பேனரில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அதில் கையெழுத்திட்டனர்.
எனினும் இந்த விழாவில் பங்கேற்ற தவெகவின் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் இதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து தவெகவின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த மொழிப் போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கும், தவெகவின் கொள்கை தலைவர்களுக்கும் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சமீபத்தில் தவெக தேர்தல் வியூக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது “ தமிழகத்தின் எதிர்காலம் விஜய், தமிழகத்தின் முகம் விஜய். இது தமிழக வெற்றிக் கழகத்தின் எனது முதல் உரை. சிறு வயதில் இருந்தே அம்பேத்கர், பெரியாரிடம் இணைக்கப்பட்டவன் நான். பெரியாரின் அரசியலை பேசும் 70 வருட அரசியல் எப்போதும் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் பேசிய போது, பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தன. அப்போது தான் விஜய் என்னை அழைத்தார்.
சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற கபடதாரிகளின் கையில் ஆட்சி தற்போது இருக்கிறது. பெரியாரிசம் பேசுவர், சமூக சீர்திருத்தம் பேசுவர் ஆனால் சாதி ரீதியாக தேர்தலை அனூகுவர். அதற்கு ஒரே மாற்று தலைவர் விஜய் தான். பெரியாரையும், சமூக சீர்திருத்தத்தையும் பேசும் ஊழல்வாதிகளின் கையில் ஆட்சி இருக்கிறது.
இங்கு கடனை உருவாக்கி அதில் ஊழல் செய்கின்றனர். பெரியார், அம்பேத்கர், அண்ணா யார் கண்ட கனவும் நிறைவேற்றப்படவில்லை. 15 ஆண்டுகளில் அதிமுக வாங்கிய கடனை 4 ஆண்டுகளில் திமுக அரசு வாங்கி உள்ளது. ஆனால் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று கூறுவார்கள். எல்லாமே செட்டிங் தான்.
எதற்கு எங்க தலைவரை பார்த்து நீங்கள் நடிக்கிறீர்கள்.. விஜய் அணியும் பேண்ட் சட்டையை கூட காப்பி அடித்து வருகிறார்கள். இதன் மூலம் முதல்வரும் விஜய் ரசிகர் தான் என்பது தெரியவந்துள்ளது. தூங்கும் போது, நடக்கும் போது கூட விஜய்க்கு வரும் கூட்டத்தை எப்படி அடக்குவது என்று யோசிக்கிறார்.
மக்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் நம்பர் 1-ஆக முடியாது. இந்த மன்னராட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது.. என மிரட்டினாலும் சிறை செல்லவும் நாங்கள் தயார். சிறையும் செல்வோம். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் செல்வோம். அடுத்த 62 வாரங்களில் விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தமிழக மக்களுக்கு தெரியும்.. மக்களின் பிரச்சனைகளை விஜய் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசுவார்.” என்று தெரிவித்தார்.