தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் “தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா”வில் அக்கட்சியின் தலைவர் விஜய் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கௌரவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எதிர்கால தமிழகத்தில் இளம் மாணவ, மாணவிகளை சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி. பாசிட்டிவான மாணவர்களை சந்திக்கும்போது ஒரு மாற்றம் நடக்கும் என சொல்வார்கள். அது இன்று காலை முதல் எனக்குள் வேலை செய்துக் கொண்டிருக்கிறது. நீங்க எல்லாரும் அடுத்த ஒரு கட்டம், உங்கள் கேரியரை தேர்வு செய்யும் நிலைக்கு செல்கிறீர்கள். உங்களில் சிலருக்கு அடுத்த நிலை பற்றிய தெளிவான முடிவு இருக்கும்.
சிலருக்கு குழப்பம் இருக்கும். எல்லா துறைகளும் நல்ல துறைகள் தான். பெற்றோர்கள், ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்களிடம் பேசுங்கள். நல்ல படிப்புகள் தாண்டி நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. படிப்பு துறை ரீதியாக சொல்கிறேன். எதிர்காலத்தில் அரசியலும் உங்கள் தேர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என விஜய் தெரிவித்தார்.