பெரம்பலூர் மாவட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு நகை, பணம் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம்(75), மாக்காயி(70) இவர்களது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மாணிக்கம் மற்றும் மாக்காயி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்தனர்.
இன்று காலையில் இவர்கள் இருவரும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மாக்காயி அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் கருகமணி ஆகியவற்றையும் அந்த நபர்களே அறுத்து சென்றுள்ளனர். மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்திருக்கிறது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் தங்களது அடையாளங்களை காவல்துறைக்கு கிடைக்காதவாறு இருக்க வீடுங்கிலும் மிளகாய் பொடியை தூவியிருக்கின்றனர். இந்தக் கொலையானது நகைக்காக நடத்தப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் வேறு காரணங்கள் இருக்குமா என காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.