ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் ‘ப்ளூடிக்’ பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் ப்ளூ டிக் பெறும் திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக ப்ளூ டிக் உள்ளவர்களின் ப்ளூ டிக் நீக்கப்போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இதில் கட்டணம் செலுத்தாமல் ப்ளூ டிக் உள்ளவர்கள் அனைவரது கணக்கில் இருந்தும் ஏப்ரல் 20ம் தேதி முதல் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கிய பிரபலமாக இருக்கும் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 29ம் தேதி இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான ANI நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடங்கி, 30 தேதி விடுவிக்கப்பட்டது. அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பால், பயனாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் இத்தகைய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ட்விட்டர் பயனாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.