திண்டுக்கல் அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாமரைப்பட்டி அருகே உள்ளது கம்மாளப்பட்டி . இங்கு கோயில் திருவிழா நடந்துள்ளது. அப்போது திருவிழாவிற்கு வந்த இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அருகில் ரயிவே கேட் அமைந்துள்ளது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு பள்ளம் இருந்துள்ளது. இதை கவனிக்காத லத்தீஸ் மற்றும் சர்வின் என்ற சிறுவர்கள் இருவரும் தவறி விழுந்தனர். பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால் சிறுவர்களால் வெளியில் வர முடியவில்லை. இதனால் மயக்கமடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் இதைக்கண்ட சிலர் தகவல் பரப்பியுள்ளனர். அப்போது அங்கு வந்த பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏன் இந்த அலட்சியம் ?
தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் நேற்று ஒரு சிறுமி பூங்கா அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ரணமே ஆறாத நிலையில் இன்று நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பணியை தொடங்கி செய்து வரும் போது முறையாக அதற்கான எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள் யாரும் பாதிப்பிற்குள்ளாகாதவாறு பணியை செயல்படுத்தி முடிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. ஏதோ ஒரு பணிக்காக பள்ளம் தோண்டிவிட்டுவிட்டு , மழை வருகின்றது என்பது போன்ற காரணத்தால் அதை அப்படியே விட்டுச் செல்கின்றனர். எனவே உரிய எச்சரிக்கை பலகை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.