காதலனுடன் கடற்கரையில் பொழுதைபோக்கிய சிறுமியை, போலீஸ் எனக்கூறி இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடலின் கழிமுகப்பகுதியில் 17 வயது சிறுமியும் அவரது காதலனும் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி வந்த இருவர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் இந்த இடத்துக்கு தனியாக ஏன் வந்தீர்கள்..? என மிரட்டியதோடு, உங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறி, அந்த இளைஞரை ஒரு இடத்திற்கும், அந்த சிறுமியை வேறொரு இடத்திற்கும் அழைத்துச் சென்றனர்.
பின்னர், அந்த சிறுமியை மிரட்டிய நபர், காதலனுக்கு ஃபோன் செய்து தான் தப்பித்துவிட்டதாகவும், தன்னை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் தனது காதலனிடம் கூறும்படி, மிரட்டியுள்ளார். இதனால், அந்த சிறுமியும் அப்படியே காதலனிடம் கூறியுள்ளார். பின்னர், அந்த சிறுமியை அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே, சிறுமியின் காதலனை அழைத்துச்சென்ற மற்றொரு நபர், அவரை அடித்து ரயிலில் ஏற்றிவிட்டு, பின்னர் அவருடம் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இருவரும் மாறி மாறி பலாத்காரம் செய்த பின், அந்த சிறுமியை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவம் நடந்த 30 மணி நேரத்தில் பண்டேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.