உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாது என்று மத்திய அரசு தனது முடிவை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர் தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் நாடு திரும்பினர். கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் உக்ரைனில் இருந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் உக்ரைன் நாட்டுக்கு திரும்பிச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே படிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் , வெளிநாடுகளில் இருந்து பாதியில் கல்வியை தொடர முடியாமல் உள்ளவர்கள் குறித்து பதில் கூற வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்பினை தொடர முடியாது என்று திட்டவட்டமாக பதில் அளித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு கொடுத்தால் அது இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் , அத்துடன் தரத்தையும் குறைக்கும். என்றும் வெளிநாட்டில் படிப்பை பாதியில் இருந்து தொடர்வது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி தரவில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. இந்த முடிவால் 20,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.