Ranitidine: தற்போது, நாட்டில் வயிற்றில் அமிலத்தைக் குறைக்கப் பயன்படும் ரானிடிடின் என்ற மருந்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடைசெய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
Ranitidine மாத்திரை அல்சர் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு பொதுவாக வழங்கப்படும் மருந்தாக உள்ளது. பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான GSK இன் முன்னோடியான Glaxo 1981 இல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மருந்து, Rantac, Aciloc & Zinetac என்ற பெயர்களில் விற்கப்படுகிறது. இந்த மருந்தில், புற்றுநோயை உண்டாக்கும் மருந்தாக மாறக்கூடிய என்-நைட்ரோசோடைமெதிலமைன் (என்டிஎம்ஏ) என்ற கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி 2019ம் ஆண்டில், அவற்றை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை (டிச.17) திரிணாமுல் காங்கிரஸ் எம்பி முகமது நதிமுல் ஹக்கின் கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களும், செயலில் உள்ள மருந்து மூலப்பொருள் மற்றும் ரானிடிடின் கலவைகளை உற்பத்தியாளரிடம் தங்கள் தயாரிப்புகளைச் சரிபார்த்து பரிசோதிக்கவும், நோயாளியின் பாதுகாப்பை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
மேலும், ரானிடிடினில் உள்ள NDMA கலப்படத்தின் அளவை பரிசோதிக்க மாதிரிகளை வரையுமாறு CDSCO மண்டல அலுவலகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அமிலத்தன்மை மற்றும் அல்சர் நோய்க்கான மலிவான மற்றும் பயனுள்ள மருந்தாக ரானிடிடின் உள்ளது என்றும், அதன் செயல்திறன், பாதுகாப்பு விவரம் காரணமாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இன் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த Ranitidine மருந்துக்கு இந்தியாவில் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையைத் தடைசெய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.