உச்ச நீதிமன்றத்தில் நேற்று கடும் கண்டனங்களுக்கு உள்ளான பதஞ்சலி நிறுவனம், தேசிய நாளிதழ்களில் பெரிய சைஸில் பொது மன்னிப்புக் கேட்டு புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் ஆசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினார். பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறினார்.
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி, பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா? என கண்டனம் தெரிவித்தார். விளம்பரங்களின் நகலை பெரிதுபடுத்தி எடுத்துவரக்கூடாது என தெரிவித்த நீதிபதி போல்ஸ்லி பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பர பத்திரத்தை எடுத்துவரவேண்டும் அப்போது தான் சரியான அளவு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற கண்டனத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் பெரிய சைஸ் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அந்த விளம்பரத்தில், ’உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய கவனத்துடனும், மிகுந்த நேர்மையுடனும் கடைப்பிடிப்போம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ என்பது முந்தைய விளம்பரத்தை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது.