நாடு சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளைக்கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த 2022ம் ஆண்டில் சாதிய தீண்டாமை மட்டும் ஒட்டிக்கொண்டு வருகின்றது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் என்ற கிராமத்தில்தான் இந்த கொடுமை அரங்கேறி உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் 4 சிறுவர்கள் தின்பண்டம் வாங்க வந்துள்ளனர். அப்போது கடைக்காரர் உங்களுக்கெல்லாம் இங்கு திண்பண்டம் கிடையாது என்று கூறுகின்றார். ஒன்றும் விளங்காத அப்பாவிக் குழந்தைகள் ஏன் தின்பண்டம் கிடையாது என்கின்றனர்.. ஆமாம் உள்ளூர் கடையில் யாரும் வாங்கக் கூடாது. உங்கள் வீட்டுக்கு சென்று கூறுங்கள் உள்ளூரில் கடையில் யாரும் தின்பண்டம் தரமாட்டிங்கிறாங்க என சொல்லுங்க… ஊரில் ஒரு கட்டுப்பாடு வந்துள்ளது யாருக்கும் கொடுக்க கூடாது என்று .. என கூறுகின்றார். இதற்கு வெள்ளந்தியாக பதில் அளிக்கும் ஒரு சிறுவன் கட்டுப்பாடா .. அப்படி என்றால் என்ன என்கின்றான். ஆமாம் ஊருக்குள் பேசி யாருக்கும் தின்பண்டம் தரக்கூடாது என முடிவு செய்துள்ளோம் என கூறுகின்றார் கடைக்காரர். இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோ நேற்று இரவு வெளியானது. இதையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்த அதிகாரிகள் பெட்டிக்கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் கடை உரிமையாளர் மகேஸ்வரன் , ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஞ்சாங்குளம் என்ற அந்த கிராமத்தில் ஏற்கனவே இருபிரிவுகளிடையே அடிக்கடி பிரச்சனை எழுவதாக கூறப்படுகின்றது. மேல் ஜாதியினர் , கீழ் ஜாதியினர் என பாகுபாடு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையில் சாதி பெயரை சொல்லி சண்டையிட்டுள்ளனர். இந்த வழக்கில் 4 பேர் பெயர் காவல்நிலைய எஃப். ஐ. ஆரில் . பதிவாகியுள்ளது. அந்த வழக்கை வாபஸ் பெறக்கோரித்தான் குறிப்பிட்ட சிலர் மிரட்டுவதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் மேல் சாதியினர் குடியிருக்கும் சாலையில் நடக்க கூடது என கூறுவதாகவும் அவர்களின் பிள்ளைகள் இருக்கையில் உட்காரலாம் .. எங்களை இருக்கையில் அமரக்கூடாது என கூறுகின், இதை ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை என பள்ளி சிறுவர்களின் பேச்சு நம்மை கவலைக்குள்ளாக்குகின்றது. இது தொடர்பாக வீடியோக்களில் வெளியானது போல உண்மையிலேயே நடக்கின்றதா என்பதை விசாரிக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

தீண்டாமைக்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகளால் பார்ப்பவரின் நெஞ்சம் ரணமாகின்றது.!.