உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஆஷிஷ் குமார் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேரும் தன்னை ஒரு குற்ற வழக்கில் தவறாக சிக்க வைத்தனர் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர்கள் 3 பேரும் தன்னை துன்புறுத்தினார்கள் என்றும், இதனால் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், அந்த 3 காவல்துறை அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக லக்னோ மேற்கு டிசிபி ராகுல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ரஹீமாபாத் காவல் நிலையத்தைச் சேர்ந்த அந்த 3 காவலர்களின் பெயர்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் மலிஹாபாத் ஏ.சி.பி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று டிசிபி ராகுல்ராஜ் தெரிவித்திருக்கிறார்