fbpx

வாச்சாத்தி வழக்கு: உயர்நீதிமன்ற தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்..! குற்றவாளிகள், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு..!

தர்மபுரி மாவட்டம் பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சந்தன மரத்தை வெட்டி, கடத்துவதாக தமிழக வனத்துறையினர் கடந்த 1990 ஆம் வருடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உதவியோடு,1992 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றி வளைத்து, பல மணி நேரம் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முடிவில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 133 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. அவர்களில், 90 பெண்கள், 28 குழந்தைகள்,15 ஆண்களும் அடங்குவர்.

அதேநேரம், சந்தன மரக்கடத்தலுக்கும், எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். அதேபோல, தேடுதல் நடவடிக்கையின்போது அந்த குழுவில் இடம் பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த கிராம மக்கள் புகார் வழங்கினர். அதோடு, கிராம மக்கள் எல்லோரும் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகவும், கிராம மக்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இந்த புகார்களை அப்போதைய மாநில அரசு தொடக்கத்தில் மறுத்து வந்தது. அதே நேரம், இது குறித்து 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முறையான புகார் பதிவு செய்யப்பட்டது.

அந்தப் புகாரில், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் என குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டு இருப்பதாக தர்மபுரி மாவட்ட விசாரணை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார். இவர்களில், 12 பேருக்கு 10 வருடங்களும், 5 பேருக்கு 7 வருடங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று தெரிவித்து, அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு, பாலியல் வன்கொடுமையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

அரசு வேலை வழங்க இயலாத சூழ்நிலை இருந்தால், சுய தொழில் தொடங்குவதற்கு அரசு உதவி புரிய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தில், 5 லட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்து, குற்றவாளிகள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். வனத்துறை அதிகாரி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில், முதன்மைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்ற வனத்துறை அதிகாரி நாதன், தன்னுடைய தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அவருடைய மேல்முறையீட்டு மனு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பச்சைக்கொடி காட்டிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!… 1000 கி.மீ. வேகத்தில் கடலுக்கடியில் சீறும் இந்தியாவின் புல்லட் ரயில்!… மாஸ் பிளான்!

Sat Oct 14 , 2023
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு கடலுக்கடியில் மணிக்கு 1000 கி.மீ.வேகத்தில் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர். அதாவது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமான பயண நேரம் என்பது 3 மணிநேரமாக உள்ளது. இந்தநிலையில், துபாய் புஜைரா 1,200 மைல் (2,000 கிமீ) தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு விமானங்களும், கப்பல்களும் […]

You May Like