வாச்சாத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தருமபுரி மாவட்டம் கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். இக்கிராமத்தில் சுமார் 655 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1992-ம் ஆண்டு ஜுன் 20-ம் தேதி சந்தனமரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக் கூறி 155 வனத்துறையினர், 108 போலீஸார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். வீடு,வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது 18 மலைவாழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் இருந்தது. சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 2012-ம் ஆண்டு வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தார்.
இந்நிலையில் தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த இரண்டு வாரம் முன்பு நீதிபதி வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன் தீர்ப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 18 பெண்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் விவகாரம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அப்போதைய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீடு செய்த அனைத்து மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி வனத்துறை அதிகாரி சிதம்பரம் 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் முதன்மையான குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற IFS அதிகாரி எல்.நாதன் தனது தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். நாதனின் மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதி கே.விஷ்வநாதன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேபோல, முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகிய மனுதாரர்கள் 6 வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.