செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில், நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மருமகம்பல் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.
இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த காளிதாஸின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.
காளிதாஸ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றதாகவும் அந்த பகையிலும் கொலை நடைபெற்று இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் அதோடு, காளிதாஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.