சட்லஜ் நதியில் கவிழ்ந்த காருக்குள் இருந்து வெற்றி துரைசாமியின் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவருடைய மகன் வெற்றி துரைசாமி (45). கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இமாச்சல் பிரதேசம் சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக வாடகை காரில் வெற்றியும், கோபிநாத்தும் சென்றுக் கொண்டிருந்தனர். காரை டென்சின் இயக்கினார். இந்நிலையில் கார் ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது. உடனே அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது.
தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காரை மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடந்து வந்தன. மாயமான வெற்றியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை குன்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. இதையடுத்து, சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்தனர். கார் விழுந்த இடத்தில் கடற்படையும் விமான படையும் தேடி வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் சட்லஜ் நதியில் பாறை இடுக்கில் இருந்து மனித மூளை கிடைத்துள்ளது. இது வெற்றியினுடையதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகத்தில் உள்ளனர். ஏனென்றால், இறந்த டென்சினுக்கும் காயமடைந்த கோபிநாத்துக்கும் தலையில் அடிபடவில்லை என்பதால் அந்த மூளை வெற்றியினுடையதா என சந்தேகம் எழுந்துள்ளது. அது போல் சட்லஜ் நதியில் கவிழ்ந்த காருக்குள் இருந்து வெற்றியின் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.