நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை என எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. 6 ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கள் திருமணத்தையும் நடத்தினார்கள். திருமணமான நான்கே மாதத்தில் அதே 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தனர். பிஞ்சு குழந்தையின் கால்களை மட்டும் இருவரும் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு 2 குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என்றனர்.

திருமணமான 4 மாதத்தில் குழந்தையா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு வேளை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பார். அதனால், அவசர அவசரமாக திருமணம் செய்திருப்பாரோ என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து உண்மைமையை கசியவிட்டனர். அதாவது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரியவந்தது. இத்துடன் பிரச்சனை முடிந்தது என்று கருதிய நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு அதன்பிறகு தான் பிரச்சனையே தொடங்கியது.

இதையடுத்து, விக்கி-நயன் ஜோடியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் தவறு செய்திருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்றைய தினம் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் பெறப்பட உள்ளதாகவும், திருப்தியாக இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.