தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்கள் 100 பேருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பரிசுகளை அறிவித்து உள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு `நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு `அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவான `லைகர்’ திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வெளியானது. அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடித்து, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்தப் படம், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஆண்டுதோறும், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவரது ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா, அன்பு பரிசுகளை அள்ளி வழங்குவது போன்று, விஜய் தேவரகொண்டாவும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு தனது டுவிட்டரில் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடைப்பிடித்து வரும் ஒரு நடைமுறை. இந்த ஆண்டும் ஒரு சிறப்பான ஐடியா ஒன்றை வைத்திருக்கிறேன். ரசிகர்கள் உங்களில் 100 பேரை விடுமுறை கொண்டாட்டத்திற்கு சுற்றுலா தலத்துக்கு அனுப்ப போகிறேன். அதற்கான அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டு விடும். எந்த இடம் என தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு உள்ளார். அதன் கீழே இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இந்த இடங்களில் ஒன்றை தேர்வு செய்யும்படி, அதற்கான வாய்ப்பையும் ரசிகர்களிடமே விட்டு உள்ளார். இதனால் பரவசமடைந்த அவரது ரசிகர்கள் டுவிட்டரில் லைக்குகளையும், விமர்சனங்களையும் குவித்து வருகின்றனர்.