திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் அமைந்திருப்பது தான் கருமண்டபம் என்ற பகுதி.
இந்த பகுதியில் பல வருடங்களாக விபச்சாரம் நடந்து வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறை நடக்க ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு செய்த விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் கருமண்டபம் சிங்கராயர் நகரில் இருக்கின்ற தி ஷைன் என்ற ஸ்பாவில் சோதனை நடத்தினர்.
ஆனாலும் ஒரு ஸ்பா நடத்துவதற்கான எந்தவிதமான உரிமமும் இல்லாமல், அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும், ஸ்பா என்ற பெயரில் அங்கே விபச்சாரம் நடந்து வந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் பணியாளராக இருந்து வந்த லட்சுமிதேவி என்ற நிறுவன மேலாளரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
அதோடு அங்கிருந்து 2 பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். லட்சுமி தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர் எனவும், அவர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன் தன்னுடைய நிறுவனம் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட செந்தில், சென்ற ஒரு வார காலமாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று இந்த நிறுவனத்தின் நிறுவனர் செந்தில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகி என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.