தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, அரசியல் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவெக தலைவர் விஜய் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பை அடுத்து, திமுகவை தவிர வேறு எந்த கட்சியையும் விமர்சனம் செய்யக்கூடாது என்றும், குறிப்பாக, விஜய்யை விமர்சிக்கக் கூடாது என்றும் பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய் – அண்ணாமலை சந்திப்பு பொய்யானது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார். அதுமாதிரி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்றும் அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், “கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜய் தெளிவாக விளக்கியுள்ளார். எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். விஜய், அண்ணாமலையை சந்தித்ததாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது. கூட்டணி குறித்து விஜய் முடிவு செய்வார்” என்று தெரிவித்தனர்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தவெக முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து தமது உரையில் கட்சித் தலைவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்த சூழலில் 2026 தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல், தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவலுக்கு அதிமுக தலைவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
Read More : தவெகவுடன் கூட்டணியா..? நாங்க எப்போ சொன்னோம்..? அதிமுக தலைவர்கள் பரபரப்பு கருத்து..!!