தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட 2 படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறப்போவதாக அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த அவர், கட்சியின் கொள்கைகள் குறித்து முதல் மாநாட்டில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மேடைக்கு வந்த விஜய், பாம்பு குழந்தை உதாரணத்துடன் பேசத் தொடங்கினார். அப்போது “ ஒரு குழந்தை தனது தாயை பார்த்து எப்படி சிரிக்கிறதோ, அதே போல் தனது முன்பு ஒரு பாம்பு வந்தாலும் அதனையும் பயமின்றி பிடித்து விளையாடும். அதே போல தான் அரசியல் என்பது ஒரு பாம்பு. பயமறியா ஒரு குழந்தை போல் அதை பிடித்து விளையாடுகிறேன். அரசியல் பாம்பை கண்டு இந்த குழந்தைக்கு பயமில்லை என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ பகுத்தறிவு பகலவன் பெரியார் கட்சியின் கொள்கை வழிகாட்டியாக இருப்பார். ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுவோம்.
பெரியாரின் பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி செயல்படும்.
காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி கட்சி செயல்படும். பெண்களை கொள்கை தலைவராக கொண்ட ஒரே கட்சி தவெக தான் என்று கூறினார்.
தொடர்ந்து தனது கட்சி கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் குறித்து பேசிய விஜய் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அறிவித்த போதே எதிரியை அறிவித்துவிட்டேன். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியல் மட்டும் நமக்கு எதிரி இல்லை, ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தையும் எதிர்ப்பது தான் நமக்கு எதிரி தான்.
முகமூடி போட்ட கரப்ஷன் கபடதாரிகள் நம் கூடவே இருந்து, நம்மை ஆண்டு வருகின்றனர். நமது ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், இன்னொரு எதிரி இந்த கரப்ஷன் கபடதாரிகள்.
மக்களை ஏமாற்றும் இந்த கரப்ஷன் கபடதாரிகளை ஜனநாயக போர்க்களத்தில் நாம் எதிர்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் தவெக கட்சிக்காக செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டாக மாறும்.
ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரை பூசி, மக்களை ஏமாற்றி, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தை காட்டி வருகின்றனர். அவர்கள் ஃபாசிஸம் என்றால் நீங்க என்ன பாயாசமா? மக்கள் விரோதி ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் நீங்க மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்காது. எங்கள் கட்சி மீது யாரும் எந்த கலரும் அடிக்க முடியாது.
இந்த நாட்டையே பாழ்படுத்துற பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி. திராவிட மாடல் சொல்லிக்கொண்டு, பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் நமது அரசியல் எதிரி.” என்று கூறி திமுகவை நேரடியாகவே சாடினார் விஜய்.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த நடிகர் விஜய். நம்முடன் கூட்டணி வைப்பர்களு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடு கொடுப்போம் என்று பேசியிருந்தார் விஜய்.
விஜய்யின் இந்த பேச்சை ஒரு தரப்பினர் வரவேற்று பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். மேலும் விஜய்யின் பேச்சிலேயே அவருக்கு அரசியல் தெளிவு இல்லை என்பது தெரிந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர்.
எந்த புதிய கொள்கையையும் அறிவிக்காத விஜய், திராவிடத்தின் கொள்கைகளையே அறிவித்து விட்டு, ஊழல் ஆட்சியை எதிர்த்து பேசுவதாக கூறுவது முரணாக உள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. பாஜக என்ற பெயரை கூட சொல்லாமல் பிளவுவாத சக்தி என்று மறைமுகமாக விமர்சித்த விஜய், திராவிட மாடல், கரப்ஷன் கபடதாரி என்றெல்லாம் கூறி திமுகவை நேரடியாக விமர்சித்துள்ளார்.
மற்றொரு புறம் அதிமுகவில் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிய விஜய், அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் விஜய் அதிமுகவை விமர்சிக்காததற்கு வேறு சில காரணங்களையும் அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.
அதிமுக தற்போது வலிமையான கட்சியாக இல்லை என்பதால் விஜய் அக்கட்சியை பற்றி பேசாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. திமுகவை பகிரங்கமாக எதிர்ப்பதால் அதிமுகவுக்கு செல்லும் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்று விஜய் பேசாமல் இருந்திருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் யாரும் இல்லை என்பதால் தன்னை வலுவான தலைவராக முன்னிறுத்திக் கொள்ள விஜய் முனைகிறார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் தலைவா, சர்க்கார் ஆகிய படங்களுக்கு அதிமுக தான் அதிக குடைச்சல் கொடுத்தது. அப்படி இருக்கும் போது விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில் 2026 தேர்தலில் அதிமுக உடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியின் தலைமையில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பாரா என்பதும் சந்தேகமே.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு 2026 தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. விஜய்க்கு துணை முதலமைச்சர் என்று கூறி கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதல்வரானது போல விஜய்யும் இங்கு ஒரு பவன் கல்யாணாக உருவாகி வருகிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் தவெக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பதும் முக்கியமான விஷயம்.
தனது பலத்தை தெரிந்து கொள்ள தனது தலைமையில் கூட்டணி இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கலாம். ஆனால் விஜய்யின் செல்வாக்கு தெரியாமல் பிற கட்சிகள் விஜய்யின் தலைமையை ஏற்பார்களா என்பதும் சந்தேகமே. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப யார் வேண்டுமானாலும் விஜய் உடன் இணையலாம். விஜய் உடன் யார் கூட்டணி வைப்பார்கள், சீமானின் வாக்குகள் விஜய்க்கு செல்லுமா? திமுக கூட்டணி உடையுமா? விஜய்க்கு எந்தளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதெல்லாம் 2026 தேர்தலுக்கு பின்னரே தெரியவரும்.