தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்கள் தற்போது பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்பட்டு பிற மாநிலங்களிலும் பட்டைய கிளப்பி வருகின்றன. தற்போது நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இப்படி ஷூட்டிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபுறம் அரசியல் பணிகளையும் சைலண்டாக செய்து வருகிறார் விஜய். அவரின் சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளன. குறிப்பாக நேற்று நடத்த பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவே அவரின் அரசியல் பிரவேசத்தின் பிள்ளையார் சுழி என சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த விழாவில் விஜய்யை புகழ்ந்து பேசிய பலரும் அவரின் அரசியல் வருகைக்காக காத்திருப்பதாக கூறினர்.
விஜய்யும் தன்னுடைய பேச்சில் லைட்டாக அரசியல் வருகைக்கு ஹிண்ட் கொடுத்திருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலில் நுழையலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாகவும், அவர் அரசியல் கட்சி தொடங்கி அதற்காக வேலைகளை செய்ய உள்ளதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தளபதி 68 படத்தில் நடித்து முடித்த பின்னர் அரசியல் வேலைகளை ஆரம்பிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அரசியலில் நுழைந்துவிட்டால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவர் நடிப்பை நிறுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.