விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெறவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விழா ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு நாட்கள் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இந்த விழாவிற்கு எங்கிருந்து யார் எல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார். இதையடுத்து, இவ்விழாவில் பெற்றோருடன் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக சார்பில் வழிகாட்டும் நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்விழாவில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு ‘பார்கோட்’ உள்ள நுழைவுக் கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள முடியும். மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்காக தவெக சார்பில் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.