கிராம சுகாதார செவிலியர்களின் நேரடி நியமனம் குறித்த அரசின் அரசாணைக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சார் நிலை பணிகளில் காலியாக உள்ள 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.
இந்நிலையில், முறையாக அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த தெய்வானை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்ததுடன், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருமே கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனக் கூறி, அரசு தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டது.