கொல்கத்தாவில் பாரதிய ஜனதா பேரணி வன்முறையில் முடிந்த நிலையில், இதில் காவல்துறையினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
மேற்குவங்க அரசை கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை தடுக்கும் வகையில், நார்த்24 பர்கானாஸ், ஹவுரா உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர். இருப்பினும், தடுப்புகளை மீறி பேரணியாக வந்த பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இந்த சம்பவங்களில் காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.
இதேபோல, அங்கிருந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் காவல் உதவி ஆணையர், பாஜக கொடியேந்திய சிலரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். இதுதொடர்பான பரபரப்பு வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடுவதும், பாஜகவினர் அவரை துரத்திச் சென்று அடிப்பதுமாக இருப்பதும் வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. இவையாவும் மேற்கு வங்கத்தை கலவர பூமியாக மாற்றியுள்ளது. அந்த வீடியோவின்படி, அந்த காவலரை வெகு தூரம் அவர் தாக்கிச் சென்ற பின், அங்கிருந்த சிலர் அவரை மீட்க முன்வந்து சிரமப்பட்டு அழைத்துச்செல்கின்றனர்.