கொடுத்த கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் ஒரு இளைஞரை கயிறில் கட்டி பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் நேற்று ஒரு இளைஞரின் கைகளில் கயிறு கட்டி அதை மோட்டார் வாகனம் மூலம் ஆறு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை நேரத்தில் நடந்த இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த எந்த பொது மக்களுமே தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால், அதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி லைட்ஸ்களை குவித்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு அநியாயம் நடக்கும் பொழுது அதை தடுக்காமல் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே என்று நெட்டிசன்கள் பலரும் திட்டி வருகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கட்டாக்கின் சுதாஹட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.