”மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களும் ஒன்றாக இல்லை. அப்படி ஒன்றாக இருப்பதை நிரூபித்தால், நான் எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்” என ஆ.ராசா பேசியுள்ளார்.
மக்களவையில் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், வக்பு மசோதா மீதான நேற்றைய விவாதத்தில் பேசிய ஆ.ராசா எம்பி, “வக்பு வாரிய மசோதா விவகாரத்தில் உண்மைகளை மறைத்து மத்திய அமைச்சர் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களும் ஒன்றாக இல்லை. அப்படி ஒன்றாக இருப்பதை நிரூபித்தால், நான் எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், தற்போது வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே, மத்திய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்சனையாக இருக்கிறது.
ஒட்டுமொத்த வக்பு சொத்துக்களையும் மத்திய அரசு அபகரிக்க முயற்சி செய்கிறது. வக்பு சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டதை அவை வக்ஃப் சொத்துக்கள் தானா என்று வரையறுக்கும் சட்டப்பிரிவு அபத்தமானது. இந்த சட்டப்பிரிவின் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது மிக மிக ஆபத்தானது” என குற்றம்சாட்டினார்.