சென்னை எர்ணாவூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கல்லூரி ஒன்றில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், ஓய்வு நேரங்களில் ஸ்னாப் சாட் செயலியில் சிலர் நண்பர்களுடன் சாட்டிங் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில், மாணவிக்கு கடலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் தமீம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக பழகிய தமீம், சில நாட்களில் தனது கிரிமினல் புத்தியை காட்டியுள்ளார்.
அதாவது, கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கே அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை அனுப்பி, இதில் இருப்பது போல், தன்னிடம் வீடியோ கால் பேச வேண்டுமென்றும், இல்லையென்றால், இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளான். அப்போது, அந்த மாணவி பயத்தில், தமீம் சொல்வதை கேட்கும் மனநிலைக்கு வந்த நிலையில், தன்னுடன் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் பார்க்கட்டும் என்று கூறியதால், அவனுடனான தொடர்பை துண்டித்துள்ளார் மாணவி.
ஆனாலும், மாணவியை விடாமல் பிளாக்மெயில் செய்து வந்துள்ளான். மேலும், ஆபாச படத்தை அளிக்க வேண்டுமானால், ஒரு நாள் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென கூறியுள்ளான். இதனால், தனது பெற்றொருடன் எர்ணாவூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கல்லூரி மாணவி கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இதையடுத்து, மாணவியை வைத்தே ஸ்கெட்ச் போட்ட போலீசார், தமீமிடம் ஆசையாக பேசுவதுபோல் நடித்துள்ளார் மாணவி.
இதையடுத்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காத்திருப்பதாக கூறிய நிலையில், அதனை நம்பி போலீசார் பின் தொடர அந்த மாணவியும் சென்றுள்ளார். ஆனால் அவன் அங்கு இல்லை. சில இடங்களை சொல்லி அந்த மாணவியை அலைக்கழித்துள்ளான். பின்னர், போலீசார் அவனது செல்போன் நம்பரை வைத்து அவன் உளுந்தூர்பேட்டையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சில போலீசார் மட்டும் அந்த மாணவிக்கு துணையாக இருந்தனர். ஆனால், தனிப்படை போலீசார், தமீமின் வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில், அவனை அதிரடியாக தட்டித் தூக்கினர். மேலும், மகனின் எதிர்காலம் கருதி அவனை விடுவிக்குமாறு தமீமின் பெற்றோர் கெஞ்சிய நிலையில், அவன் செய்த சேட்டைகளை படம் போட்டு போலீசார் காட்டியதால், வாயடைத்து போயினர். இதையடுத்து, தமீமை கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.