பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகலாம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. போலி கஸ்டமர் கேர் எண்களால், பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்..
அந்த வகையில், டெல்லியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்த பிறகு ரூ.34,000 பணத்தை இழந்தார். ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் வினோத் குமார், புதிய டெபிட் கார்டு டெலிவரிக்காக காத்திருந்தார்.. அது பற்றி விசாரிக்க அவர் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்தார், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. விரைவில், அதே குரியர் நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிய ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. போலி பிரதிநிதி சில சரிபார்ப்பு படிகளைப் பின்பற்றி OTP ஐப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்.. வினோத் குமாரும் OTP-ஐ பகிர்ந்ததால், அவர் தனது பணத்தை இழக்க வழிவகுத்தது.
அதே போல் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செட் டாப் பாக்ஸை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யும்போது ரூ.81,000 இழந்ததாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.. டிடிஎச் சேவைக்கு பணம் செலுத்தும் போது அவர் சில சிக்கல்களை எதிர்கொண்டதாகவும், உதவி பெறுவதற்காக ஆன்லைனில் கஸ்டமர் கேர் எண்ணைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.. அவரின் அழைப்பை அப்போது யாரும் எடுக்கவில்லை.. அப்போது மறுநாள் ஒரு அறியப்படாத நபரிடமிருந்து அப்பெண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அவர் தன்னை வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி என்று அறிமுகப்படுத்தி உதவி வழங்கினார். அவரது அறிவுறுத்தலைப் பின்பற்றி OTP ஐப் பகிர்ந்தவுடன், சுமார் 81,000 ரூபாய் பணத்தை இழந்தார்.
இதே போல் சமீப காலமாக போலி கஸ்டமர் கேர் நபர்களால் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.. வங்கிகள், டிராவல் ஏஜென்சிகள், ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கஸ்டமர் கேர் எண் உதவி தேவைப்படும்போது, பலரும் பெரும்பாலும் ஆன்லைனில் தொலைபேசி எண்களைத் தேடுவார்கள். நிறுவனங்கள் பொதுவாக தங்கள் வலைத்தளங்களில் தங்கள் தொடர்புத் தகவலைப் பட்டியலிடுகின்றன, அவை search engine மூலம் எளிதாகக் கண்டறியப்படுகின்றன.
இருப்பினும், மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக, உண்மையான இணையத்தளங்களை போலவே, போலி இணையதளங்களை உருவாக்கி, போலி தொலைபேசி எண்களை பட்டியலிடுகிறார்கள். மக்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணைத் தேடும்போது, இந்தப் போலி இணையதளங்கள் தோன்றும். பட்டியலிடப்பட்ட எண்களுக்கு மக்கள் அழைக்கும் போது, எளிதாக சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்… இத்தகைய மோசடிகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..
எண்கள் மற்றும் இணையதளங்களைச் சரிபார்க்கவும்: கூகுளில் நீங்கள் பார்க்கும் இணையதளத்தை ஒருபோதும் கண்மூடித்தனமாக அழைக்கவோ அல்லது நம்பவோ வேண்டாம். ஆன்லைனில் நீங்கள் காணும் எந்த எண்ணையும் அல்லது மின்னஞ்சலையும் தொடர்புகொள்வதற்கு முன் எப்போதும் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
முக்கியத் தகவலைப் பகிர வேண்டாம்: உண்மையான நிறுவனங்களும் வங்கிகளும் OTP போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் கேட்காது.. மேலும் வங்கி அதிகாரிகள் தங்களுக்கு உதவக்கூடிய செயலியை பதிவிறக்குமாறு கேட்கமாட்டார்கள். யாராவது தொலைபேசியில் இதுபோன்ற தகவல்களைக் கேட்டால், அந்த நபரை பிளாக் செய்து, அதிகாரிகளுக்கு புகாரளிக்கவும்.
மோசடி இணைப்புகளில் ஜாக்கிரதை: நீங்கள் பெறும் இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மோசடி செய்பவர்கள் தாங்கள் அனுப்பும் இணைப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்துமாறு அறிவுறுத்தலாம் அல்லது பகிரப்பட்ட இணைப்பு வழியாக அணுகப்பட்ட இணையதளத்தில் உங்கள் விவரங்களை உள்ளிட கோரலாம். ஆனால் அதுபோன்ற இணைப்புகளில் பணம் செலுத்தவோ அல்லது வங்கி தொடர்பான விவரங்களை உள்ளிடவோ கூடாது.