இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது நெடுஞ்சாலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்தும், அதன் செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விரிவான அறிக்கையும் வெளியாகியிருந்தது.
ராஜ்மார்க்யாத்ரா என்றால் என்ன..?
ராஜ்மார்க்யாத்ரா என்பது கூகுள் ப்ளே ஸ்டோர் + ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் இரண்டிலுமே கிடைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி, வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குவதுடன், புகார் தீர்க்கும் முறையையும் வழங்கும். தேசிய நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு அத்தியாவசிய தகவல்களின் களஞ்சியமாக இந்த ராஜ்மார்க்யாத்ரா செயலி செயல்படுகிறது. சுங்கசாவடி, வானிலை நிலவரம், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள் என அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் இதில் கிடைக்கிறது.
மேலும், இந்த செயலில் புகார் அளிக்கும் வசதிகள் உள்ளன. இதில் புகார்களை அளித்து, அதற்கான தீர்வையும் பெறலாம். தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், அந்த இடத்தின் லோகேஷனை இணைத்து, வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையும் அனுப்பலாம். அப்படி பெறப்படும் புகார்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் சரி செய்யப்படும். தாமதம் ஏற்படும் பட்சத்தில், அது தானாகவே உயரதிகாரிகளுக்கு மாற்றப்படும்.
இந்த செயலியில் மாதாந்திர பாஸ்களைப் பெறவும், சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் தொடர்பான பிற வங்கி சேவைகளை அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதி வேகமாக சென்றால் அறிவிப்புகள், வாய்ஸ் மூலமாக வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வாகனங்கள் வேகமாக செல்லும்போது, ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு, டிரைவர்களுக்கு எச்சரிக்கை சிக்னல்கள் அனுப்பப்படும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.