டீக்கடை மற்றும் உணவகங்களில் அச்சிடப்பட்ட பழைய பேப்பர்களில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில், சென்னை அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகளில் வழங்கப்படும் உணவு பதார்த்தங்களை பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் பொட்டலமாக பொதுமக்கள் வாங்கக் கூடாது என்று சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமராஜ் மற்றும் ஊழியர்கள் உணவகங்கள், தேனீர் கடைகள், தள்ளுவண்டி கடைகளில் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் காகிதத்தில் உணவுப் பொருட்கள், வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்றவற்றை பார்சல் செய்து பொதுமக்களுக்கு வழங்க கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை மீறி இன்னமும் பழைய அச்சிடப்பட்ட பேப்பரில் பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப்பொருட்களை டீக்கடை, உணவகங்களில் பார்சல் செய்து வழங்குகின்றனர். எங்களுக்கு வந்த தகவலையடுத்து ஆய்வு செய்து வருகிறோம். செய்தித் தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயல் கொஞ்சம், கொஞ்சமாக விஷத்தை உண்பதற்கு சமம்.
உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய தாலேட் என்ற வேதிப்பொருள் கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில் பொட்டலமிடப்படும் உணவில் கலப்பதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனை நிறுவனங்களிலும் செய்தித்தாள் மற்றும் அதுதொடர்பான பொருட்களை பொட்டலமிடவோ உண்பதற்கோ வழங்ககூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.