சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தொடர்ந்த வழக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை நீதிபதி பவானி சுப்புராயன் விசாரித்தார்.
அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்கை உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
அரசு தரப்பில் வாதிடுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடம் என்பது மிகவும் குறுகலானது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு 16 அடி சாலை தான் உள்ளது. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன் அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன் என நீதிபதி பவானி சுப்பராயன் கூறினார். ஆனால், 12 மணிக்கு பதிலளிக்கிறோம் என ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையிட்டனர்.