சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இவர், கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், மறுநாளே அவர் உயிரிழந்தார். இதனால், விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்தனர். அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ”கொரோனா சமயத்தில் தடுப்பூசி குறித்து மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். விவேக்கும் அப்படித்தான் இருந்தார். நிறைய பேரிடம் தடுப்பூசி போடலாமா..? வேண்டாமா..? என்பது குறித்து ஆலோசனை செய்தார். அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கு ஷூட்டிங் செல்ல வேண்டியிருந்தது.
விமானத்தில் செல்ல வேண்டுமென்றால், தடுப்பூசி போட வேண்டும் என்கிற விதி இருந்தது. இதில், இரண்டு முறை போட முடியவில்லை. 3-வது முறையாகத்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது ஊடகத்தினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தான் போட்டுக்கொண்டால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்பதால்தான் விவேக் அப்படி செய்தார்.
ஆனால், மறுநாளே அவர் இறந்துவிட்டார். அவர் மரணத்திற்கு என்ன காரணமென்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. அவர் தனது உடலை அப்படி பார்த்துக்கொள்வார். ஊரடங்கு சமயத்தில் கூட எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் நகரில் வாக்கிங் செல்ல தவறியதில்லை. வீட்டு மாடியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வார். அவர் தவறாமல் யோகாவும் செய்வார்.
இப்படி உடலை பார்த்துக்கொண்டவர் விவேக், எப்படி ஒரு இறப்பை இப்படி சந்திக்க முடியும் என்கிற குழப்பம் எங்களுக்கு இருந்தது. அவர் இறந்ததை அடுத்து பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பயந்தார்கள். ஆனால், காலம் செல்ல செல்ல அனைவருமே தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே இறக்கவில்லையே. எனவே, விவேக் இறப்புக்கு தடுப்பூசிதான் காரணம் என்று சொல்ல முடியாது” என்றார்.