வயநாடு மலைப் பகுதிகளில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சாலியாற்றில் மிதப்பதாகவும், பல உடல்கள் நிலாம்பூரில் கரை ஒதுங்கி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவின் வயநாடு மலைப் பகுதியான சூரல்மலை, முண்டகக்கை உள்ளிட்டவைகளில் அடுத்தடுத்து அதிகாலையில் மிகப் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் முண்டகக்கை மற்றும் மலைகிராமங்களில் வசித்தவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 70 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
இந்நிலையில், வயநாடு முண்டகக்கை சிறு நகரில் மொத்தம் 2 வார்டுகளில் 3,000 பேர் வசித்ததாக கல்பேட்டா எம்.எல்.ஏ. சித்திக் தெரிவித்துள்ளார். இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்கிறார். அத்துடன் இன்னும் சில மணிநேரங்களில் முண்டகக்கை மலைப்பகுதியில் இருள் சூழ்ந்துவிடும். இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது கடினமாக இருக்கும். முதற்கட்டமாக உயிருடன் இருப்பவர்கள் மட்டும் மீட்கப்படுகின்றனர்.
அத்துடன் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் காட்டாற்று வெள்ளத்தில் சாலியாற்றில் அடித்துவரப்பட்டு நிலாம்பூர் பகுதிகளில் கரை ஒதுங்குவதாக கேரளா பத்திரிகையாளர்கள் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் கனவிலும் நினைக்க முடியாத மனிதப் பேரழிவு வயநாடு மலைகளில் நிகழ்ந்துள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Read More : அபராதம் ரூ.5,000இல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு..!! மாட்டு உரிமையாளர்களே உஷார்..!!