தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா ‘அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன’ என கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை இது காட்டுகிறது என கூறினார்.
பின்னர் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறியது குறித்த கேள்விக்கு, ‘அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும்’ என தெரிவித்தார். ஓபிஎஸ் பின்பு இருப்பவர்கள் கூலி ஆட்கள், உண்மையான அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு, ‘உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது வரும் தேர்தலில் தெரியும்’ என்றார்.
அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா? எடப்பாடி அணியையா? என்ற கேள்விக்கு, ‘நாங்கள் தொடர்ந்து NDA கூட்டணியில் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது பழனிசாமி தான்’ என தெரிவித்தார். தொடர்ந்து, எத்தனை இடங்களில் போட்டி என்ற கேள்விக்கு, ‘அதனை உறுதியாக உங்களிடம் சொல்வேன்’ என்று தெரிவித்தார்.