பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் (54) வெள்ளிக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அண்ணாநகரில் உள்ள காவல்நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர். இந்த கொலை வழக்குத் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் இதற்கிடையே, 3 முறை உளவுத்துறை எச்சரிக்கை வந்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக புலனாய்வு அமைப்புகளிடமிருந்து எந்த உளவுத் தகவலும் வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது என்பது குறித்து இடம் இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. சிலர் மீது சந்தேகம் இருக்கிறது. ஆற்காடு சுரேஷ் சிறையில் இருந்தபோது சில சம்பவங்கள் நடந்துள்ளன. அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே தற்போது கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும்” என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.