நெல்லை மாவட்டம் பாஜக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சுபாஷ் சந்திர போஸ் இல்லை என்றால் வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் நல்ல செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் விவகாரத்தில் சீமான் பல்வேறு கருத்துகளை முன்வைக்கிறார். அண்ணாமலையும் கருத்து சொல்லி இருக்கிறார். ஆனால், நான் பெரியார் புத்தகத்தை படிக்கவில்லை. புத்தகத்தை படித்த பின் கருத்து சொல்கிறேன்.
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். ரெய்டு நடத்தி தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுக மட்டுமின்றி, திமுகவினர் வீட்டிலும் கூட வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என அவர்கள் நினைக்கிறார்களோ, அங்கு ரெய்டு நடக்கும். நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடக்கலாம்” என்று தெரிவித்தார்.