வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மோசடியில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்குமாறு மத்திய – மாநில அரசுகள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இந்த மோசடிகளில் சிக்கி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் இன்றளவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைபர் குற்றவாளிகள் இப்போது புது புது வழிகளை கண்டுபிடித்து மோசடியில் ஈடுபட்டு வருவதால், மக்கள் பலரும் அதில் சிக்கிக் கொண்டு தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், ஆர்பிஐ எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி, வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஏதேனும் அடையாளம் தெரியாத நபர் அல்லது தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இத்தகைய அழைப்புகள் மூலம் உங்களை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி அல்லது சைபர் கிரைம் அதிகாரி என உங்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். பின்னர், உங்களது தகவல்களை சேகரிப்பார்கள். இவர்களிடம் பேசுவதை நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்புகள் வந்தால், என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. மோசடி அழைப்புகள், டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற அழைப்புகள் ஏதேனும் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்தால், அந்த அழைப்பு தொடர்பான தகவலை 1930 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து புகாரளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. என்ன தான் அரசாங்கம் மோசடிகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாம் விழிப்புடன் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்களை தடுக்க முடியும்.