கடந்த 60 ஆண்டுகளில், அடுத்த 3-4 தலைமுறைகளுக்கு நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தியின் பெயரில் நாம் சம்பாதித்து விட்டோம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-வும், கர்நாடக சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார், பெங்களூருவில் உள்ள Freedom Park-ல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”சோனியா காந்தி ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்கிறார். அவர் தன் கணவர், மாமியாரை இழந்திருக்கிறார். நாம் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். கடந்த 60 ஆண்டுகளில், அடுத்த 3-4 தலைமுறைகளுக்கு நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தியின் பெயரில் நாம் சம்பாதித்துவிட்டோம். சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இப்போது அந்தக் கடனை அடைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் உண்ணும் உணவில் புழுக்கள் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” எனக் கூறினார்.
இந்நிலையில், கே.ஆர்.ரமேஷ் குமாரின் கருத்தை விமர்சித்து கர்நாடக பாஜக பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில், “ரமேஷ் குமார் போலி காந்தி குடும்பத்தின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவலைப்படுகிறார். ஆனால், அவர்களை 60 ஆண்டுகளாக ஆட்சியில் வைத்திருந்த மக்களைப் பற்றி கவலைப்படவில்லை” என்று பதிவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த கருத்தை திரும்பப்பெற கே.ஆர்.ரமேஷ் குமாரிடம் வேண்டுகோள் விடுத்தபோது, “என்னுடைய வார்த்தைகளை நான் திரும்பப் பெற மாட்டேன். என் அறிக்கைகள் எப்போதும் தைரியமாகவும், நேரடியாகவும் இருக்கும். காந்தி குடும்பத்தால் நாம் பயனடைந்தோம். நாம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்” எனக்கூறி தன்னுடைய கருத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டார்.