இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 7ஆம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 14 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குததில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது.
தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருக்கிறது.
பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், அல்-அஹ்லி உட்பட 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தவிர வடக்கு காசாவில் உள்ள 2-வது பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடை தயாரிக்கும் கேரள நிறுவனம், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சீருடை தயாரிப்பை நிறுத்தியுள்ளது. மரியன் அப்பேரல் எனும் தனியார் நிறுவனம் கேரளாவின் கண்ணூரில் இயங்கி வருகிறது. இது கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் காவல்துறைக்கான சீருடைகளை தயாரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் சீருடைகளை இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.
ஆனால், இந்த ஆண்டுக்கான ஆர்டரை நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஹமாஸின் தாக்குதலையும், இஸ்ரேலின் பதில் தாக்குதலையும் கண்டித்துள்ள நிறுவனத்தை நடத்தும் தாமஸ் ஒலிக்கல், போர் நிறுத்தம் வரை இஸ்ரேலிடமிருந்து புதிய ஆர்டரை பெறப்போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளார். 25 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்க மறுப்பது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.