நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தென்னக ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கடந்த மாதம் வரை இருந்தது. இதற்கிடையே, நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவையாக தொடங்க உள்ளது. அதன்படி, இந்த ரயில் வரும் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்தடைகிறது. காலை 8.30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் சென்றடைகிறது. காலை 10.35 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயிலில், வழக்கமான ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், கார்டு வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.